Ad Widget

கூட்டுறவு அமைப்புகள் அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டுறவுதின நிகழ்ச்சி யாழ் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04.07.2015) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,ஆண்டுதோறும் யூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை சர்வதேச கூட்டுறவு தினம் உலகம் பூராவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் சர்வதேச கூட்டுறவு தினத்துக்கான கருப்பொருளாகச் சமத்துவம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தின் சகல மட்டங்களிலும் பாரபட்சம் நிலவுகிறது. இனம், மொழி, மதம், பால், வயது, தேசம் சார்ந்து வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இதேபோன்று அரசியல் ரீதியான பாரபட்சமும் நிலவுகிறது. கூட்டுறவு அமைப்புகளில் இவைபோன்று வேறுபாடுகளைக் களைந்து யாவரும் சமம் என்ற சமத்துவம் எட்டப்பட வேண்டும் என்பதாலேயே இந்த ஆண்டின் கூட்டுறவு தினத்துக்குரிய கருப்பொருளாகச் சமத்துவம் என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு அமைப்புகளின் நெறியாளர் குழுவில் அங்கம் வகிப்பவர்களோ அல்லது பணியாளர்களோ ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது செயற்பாட்டாளராகவோ இருப்பதற்கு உரித்துடையவர். அது அவர் சுதந்திரம். ஆனால், தாங்கள் சார்ந்த கட்சிகளின் நலன்களை முன்னிறுத்தி கூட்டுறவு அமைப்புகளைக் கட்சி சார்ந்த அமைப்புகளாகப் பயன்படுத்த முயல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது.

கூட்டுறவு அமைப்புகளைக் கட்சிகளின் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்துவது கூட்டுறவு ஒட்டுமொத்த சமூகத்துக்குமானது என்ற கொள்கைக்கு முரணானது. இது கூட்டுறவின் அபிவிருத்தியை வெகுவாகப் பாதிக்கும். கடந்த காலங்களில் கூட்டுறவு அமைப்புகளைத்; தங்கள் சார்ந்த கட்சி நலன்களுக்காகப் பயன்படுத்துவதற்குச் சிலர் முனைந்திருந்தாலும், வருங்காலங்களில் இதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவர் தி.சுந்தரலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு தினத்தையொட்டிக் கூட்டுறவு அமைப்புகள் மத்தியிலும் பாடசாலைகள் மத்தியிலும் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்குதலும் இடம்பெற்றது.

Related Posts