Ad Widget

கூட்டுறவாகச் செயற்பட்டதால் பப்பாசிப் பழ ஏற்றுமதியில் வவுனியா விவசாயிகள் சாதனை

பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப் பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது.

இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்று வடக்கு விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

வவுனியா முத்தையா மண்டபத்தில் சர்வதேச கூட்டுறவாளர்தின விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04.10.2015) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கூட்டுறவு அமைப்புகள் நலிவடைந்திருப்பதற்கு கடந்த காலப் போரையே பலரும் காரணமாகச் சொல்லிவருகிறார்கள். போரும் ஒரு காரணமே தவிர, போர் மட்டுமே ஒரு காரணம் அல்ல.
கூட்டுறவு அமைப்புகள் சரிவர இயங்க முடியாமல் இருப்பதற்கு, திறந்த பொருளாதாரத்தின் போட்டிச் சந்தைக்கு அவற்றால் முழுமையாக முகங்கொடுக்க முடியாமல் இருப்பதும் ஒரு பெருங்காரணமாக உள்ளது. தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய புதிய வழிமுறைகளைக் கூட்டுறவு அமைப்புகள் கண்டறிந்து செயற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

கூட்டுறவால் சாதிக்க முடியும் என்பதற்கு வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச்சங்கம் ஒரு எடுத்துக்காட்டு. 200 பப்பாசிச் செய்கையாளர்கள் இணைந்து இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விவசாயிகளிடம் இருந்து சங்கம் கிலோவுக்கு 30 ரூபா கொடுத்துப் பப்பாசிப்பழத்தை கொள்வனவு செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில், இதுவரையில் 700 இலட்சம் ரூபாவிற்கு பழம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது.

வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பைப் பாராட்டுவதற்கு இன்னுமொரு விடயம் உள்ளது. இந்தக் கூட்டுறவுச் சங்கம் காலப் பொருத்தமாக சி.ஆர்.எக்ஸ்போர்ட் எனப்படும் ஏற்றுமதி நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்துகொண்டுள்ளது. இந்தக்; கூட்டுத் தொழில் முயற்சியால், விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் பப்பாசிப் பழங்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஆண்டில் கூட்டுறவு அமைப்புக்கு 24 இலட்சம் ரூபா இலாபப் பங்காகக் கிடைத்திருக்கிறது. வினைத்திறன்மிக்க இந்தச் சங்கத்தைக் கௌரவிக்கும் முகமாக இலங்கை ஏற்றுமதியாளர் சம்மேளனம் வடக்கின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதை இதற்கு வழங்கிக் கௌரவித்திருக்கிறது. அந்தவகையில், ஏனைய உற்பத்திகளில் ஈடுபடும் விவசாயிகளும், கூட்டுறவு அமைப்புகளும் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்தை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டக் கூட்டுறவுச் சபையின் தலைவர் இ.சுப்பிரமணியத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.இரவீந்திரநாதன், தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் லலித் ஏ.பீரிஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தார்கள்.
Co-op Day Vavuniya (1)

Co-op Day Vavuniya (2)

Co-op Day Vavuniya (3)

Co-op Day Vavuniya (4)

Co-op Day Vavuniya (5)

Co-op Day Vavuniya (6)

Related Posts