Ad Widget

கூட்டமைப்பை பிளக்க ரணில் முயற்சி : முதலமைச்சர் குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக வடக்கு மாகாணசபையில் நேற்றுக் குற்றஞ்சுமத்தினார்.

cv-vickneswaran-cm

வடக்கு முதலமைச்சருடன் பேசமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்தான் பேசுவேன் என்று அவர் கூறுவது எம்முள் பிரிவினையை ஏற்படுத்தப் பயன்படுத்தும் உபாயமாகவே நான் கருதுகின்றேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், விசேட கவனவீர்ப்பை முன்வைத்து உரையாற்றுகையி லேயே முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தந்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், உண்மைக்குப் புறம்பாக நான் பேசினேன் என்று என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் விளக்க மளிக்க வேண்டியது எனது கடமையாகும்.

இந்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி மாலை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை, அவர் பதவி யேற்ற பின்னர் சிலருடன் சென்று கொழும்பில் சந்தித்தேன். யார் யாருடன் எங்கு சென்று சந்தித்தேன் என்பது பற்றி நான் கூறப்போவதில்லை.

எந்த ஒரு இராணுவ முகாமையும் நான் வடக்கு மாகாணத்தில் இருந்து அகற்றப் போவதில்லை என்று மகாநாயக்க தேரர்களிடம்தான் கூறப்போவதாக என்னைப் பார்த்துக் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை என்று தற்போது கூறுவாராக இருந்தால், வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற அவர் தற்பொழுது சம்மதிக்கின்றாரா என்பதை அறியத் தரவேண்டும்.

அவருடனான சந்திப்பு தொடர்பில் நான் பேச வேண்டி வந்ததற்கு, யாழ்ப்பாணத்திற்கு வந்து ருவான் விஜேயவர்த்தன இராணுவம் பற்றி பேசியதே காரணம்.

இராணுவம் பற்றி தான் எதுவும் பேசவில்லை என தற்போது ரணில் கூறுவதானால், இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுவது தொடர்பில் அவரின் நிலைப்பாடு தற்போது வித்தியாசமாக இருப்பது போல் தெரிகின்றது. படையினரை வட மாகாணத்திலிருந்து விரைவில் வெளியேற்றுவேன் என்று அவர் கூறினால் வடமாகாண மக்கள் அதனால் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்.

அதைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் பேசுவேன், முதலமைச்சருடன் பேசமாட்டேன் என்று கூறுவது எம்முள் பிரிவினையை உண்டாக்குவதற்கான உபாயமாகவே நான் பார்க்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் எமக்குள் எவ்விதமான பிரிவினையும் இல்லை. நாம் அனைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெரு விருட்சத்தின் கிளைகளாகவே இருக்கின்றோம்.

எம்மை வளப்படுத்தி செழுமைப்ப டுத்துவது வட, கிழக்கு மாகாண மக்களின் தற்கால நலனும், வருங்கால நலனும் பற்றிய சிந்தனைபாற்பட்ட உரமேயாகும். கிளைகளை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் எவருமே பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts