தேசிய அரசாங்கத்தை அமைத்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் அமைச்சர்களாவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தே ஆதரவளிக்க வேண்டும் என வடமகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நாம் நிராகரிக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கக்கூடியவர்கள் இன்று இல்லை என்பதால், அவர்கள் மீது பல தரப்பினரும் வீணான பழிகளை சுமத்தி வருகின்றனர்.
இத்தகைய போக்கு எமது இனத்துக்கு ஆரோக்கியமானதல்ல. 2005ஆம் ஆண்டு தேர்தலின் போது புலிகள் பணத்தைப் பெற்றுக்கொண்டுதான் தமிழ்மக்களை வாக்களிக்விடாமல் தடைசெய்தனர் என்ற குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 20 கோடி ரூபாயுக்கு அவர்கள் தமிழ்மக்களை வாக்களிக்காது தடுத்தனர் என குற்றச்சாட்டுக் கூறப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்துக்கு சமாந்தரமான அரசாங்கத்தை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள். அவர்களுக்கு வரிமூலம் கிடைத்த பணத்தை எண்ணுவதற்காகவே பல இயந்திரங்களைப் பயன்படுத்தினர்.
அப்படிப்பட்டவர்கள் 20 கோடி ரூபாய்க்கு வாக்களிப்பை தடுத்தனர் என்பது தவறான கருத்தாகும்.
அன்றைய சூழ்நிலையில் குறைந்தபட்சம் இடைக்கால நிர்வாக அலகு குறித்தாவது எழுத்துமூல உறுதிப்பாடொன்றை உருவாக்க என் மூலமாக அனுப்பிய செய்தியை அன்று பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க கேட்கக்கூடவில்லை.
இடைக்கால நிர்வாகம் குறித்து பேசாததாலேயே அன்று வாக்களிக்காது தடுத்தனர். பின்னர் என்னிடம் இது குறித்து அவரே கவலையுடன் மனம் வருந்திக்கூறினார். புலிகள் பணம் பெற்றுக்கொண்டு தமிழ்மக்களை வாக்களிக்கவிடாது தடுத்தனர் என்ற செய்தி பிழையானது. இந்தக் கருத்து நிராகரிக்கப்பட வேண்டியது எனத் தெரிவித்தார்.