Ad Widget

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது!

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

பொதுத்தேர்தல் குறித்து கட்சிப் பிரமுகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினோம். இதற்கிணங்க மட்டக்களப்பு, வன்னி போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. மட்டு, வன்னி மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும். அதன் பின்னரே வேட்பாளர் சம்பந்தமாக உத்தியோகபூர்வ முடிவுகள் எடுக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் எந்தவொரு நபரையும் எமது கட்சி சார்பாக நிறுத்துவதற்கு முடிவெடுக்கவில்லை. என்னுடன் பலபேர் தொடர்புகொண்டு சந்தர்ப்பம் தருமாறு கேட்கின்றனர். இதேபோன்றுதான் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் நேரில் வந்து தன்னை வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது அவருக்கு எந்தவிதத்திலும் உறுதியளிக்கவில்லை. இருந்தும் அவரை நான் இம்முறை வேட்பாளராக நியமித்ததாக செய்திகளில் பார்க்கின்றேன். இது எந்த விதத்திலும உண்மையில்லை. இச் செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் இருந்து சில கட்சிகளின் எதிர்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. காரணம், அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் இவ் எதிர்ப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கூட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் எந்தவித முடிவினையும் எமது கட்சி எடுக்காது என்பதனை நான் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகிறேன். மற்றும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் இறங்கவுள்ளதால் இத் தொகுதியில் எமது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது.

மட்டக்களப்ப மாவட்டத்தில் வேறு தொகுதியில் தான் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எமது கட்சியின் மட்டக்களப்பு கிளை மேற்கொண்டு வருகின்றது – என்றார்.

Related Posts