Ad Widget

கூட்டமைப்பு பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றது; தவராஜா

thavarasa13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்காத, மாகாண சபையினால் செய்ய முடியாத விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளாக் கூறி மக்களை ஏமாற்றுகின்றது என வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஈ.பி.டி.பி வேட்பாளர் ஆறுப்பிள்ளை சின்னத்துரை தவராஜா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சின்னத்துரை தவராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபையின் அதிகாரங்களில் இல்லாத விடயங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசி வருகின்றார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஆளுநராக இருக்க முடியாது அவரை மாற்றுவதற்கு அனுமதி தாருங்கள், வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற அனுமதி தாருங்கள், வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்த அனுமதி தாருங்கள் என்று விக்னேஸ்வரன் தேர்தல் வாக்குறுதிகளை ஊடகங்கள் வாயிலாக கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவினை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது எதற்காக ஆளுநரை மாற்ற வேண்டுமென கூறுகின்றது என்று புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைவிட ஆளுநரை நியமிப்பதற்கும் மாற்றுவதற்கும் நாட்டின் ஜனாதிபதிக்கே பூரண அதிகாரமுண்டு. வடமாகாண சபையினால் இதனைச் செய்ய முடியாது என்பதனை விக்னேஸ்வரன் நன்றாகத் தெரிந்திருந்தும் இவ்வாறு பொய் வாக்குறுதிகள் கொடுத்து வருகின்றார்.

அத்துடன் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் ஒரு பிரதேசத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே இருக்கின்றது. இலங்கையிலும் அவ்வாறே இருக்கின்றது. அப்படியிருக்க மாகாண சபையினால் ஒரு போதும் இராணுவத்தினை வெளியேற்ற முடியாது.

எந்தவொரு வெளிநாடும் ஒரு நாட்டின் மத்திய அரசிற்கு ஊடாகவே நிதி உதவிகளினைச் செய்யும் அந்நாட்டில் நிதி அமைப்பு கிடைக்கப்பெற்ற நிதியினை பிரித்து பிரதேச ரீதியாக வழங்கும். அதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல நேரடியாக மாகாண சபையினால் வெளிநாட்டுகளிலிருந்து நிதியினை பெற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்படியான பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்று, மாகாண சபையினால் செய்ய வேண்டிய அபிவிருத்திகளையும் செய்யப் போவதில்லை. ஏனெனில் மத்திய அரசுடன் இணக்கப்பாட்டிலுள்ள மாகாண சபைகளுக்கே அபிவிருத்திக்கான நிதிகள் கிடைக்கப்பெறும்.

மக்களின் நிலங்களை இராணுவம் அபகரித்தால் அதற்கு எதிராக நாங்கள் போராடுவோம், மக்களுடைய நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் மக்களே அதனை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts