Ad Widget

கூட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் குழுவாக இணைந்து செயற்படும்! பங்காளிக் கட்சிகளிடம் சம்பந்தன் உறுதி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அடுத்து வரும் காலங்களில் ஒரு குழுவாக இணைந்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், பங்காளிக் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சர்வவேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

புளொட் அமைப்பு சார்பில் எந்தவொரு அங்கத்தவர்களும் இதில் பங்கேற்றிருக்கவில்லை. இக்கூட்டத்தின்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் தொடர்பாக மேலும் தெரிவருவதாவது:​-

குறித்த கூட்டம் ஆரம்பமானதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் உறுப்பினர்கள், ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் தாமே முன்னாள் ஜனாதிபதியை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினர் என்றும் இலங்கைக்கு எதிராக இருந்த சர்வதேச சமூகத்தை ஆதரவளிக்கும் நிலைக்குக் கொண்டுவந்ததாகவும் கூறுகின்றனர்.

முன்னைய அரசை மின்சாரக் கதிரைக்குச் செல்ல வேண்டிய குற்றத்தை தற்போதைய ஆட்சியாளர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தாமே அவர்களைக் காப்பாற்றியதாகவும் பகிரங்கமாக கூறுகையில் கூட்டமைப்பின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழும் தாங்கள் (சம்பந்தன்) இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது என நாம் கருகின்றோம் எனக் குறிப்பிட்டனர்.

அத்துடன் நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறும் அரசு போர்க்குற்றவாளிகளைத் தாமே காப்பாற்றியதாகக் கூறுவதை எவ்வாறு சகித்துக்கொள்வது? நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாகத் குறிப்பிடும் அதேவேளை, யார்யாரை கைதுசெய்ய வேண்டும் என்பதை அரசே தீர்மானிக்கின்றது என்ற ஐயப்பாடும் எழுந்துள்ள சூழலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உள்ளக விசாரணைப் பொறிமுறையினை முன்னெடுப்பதன் ஊடாக எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்.

குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தாமல் தப்பவிடுவது பாரிய குற்றமாகும். ஒரு அசாதாரண சூழலில், அச்சம் காரணமாக குற்றவாளியாகக் கருதப்பட்டவரை அரசுக்குக் காட்டிக்கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக அரசியல் கைதிகள் என்ற போர்வையில் தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் தடுத்துவைத்திருப்பது நியாயமான செயற்பாடாகுமா என்பதை பரிசீலைக்குட்படுத்தவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதேநேரம் இறுதிப்போரின்போது மனித உரிமை மீறல்களுக்கும் நீதிக்குப் புறம்பான கொலைகள் இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அண்மையில் பிரதமரும் பயங்கரவாத தடைச் சட்டம் காலாவதியாகிப்போன ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் நிறைவேற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரே பயங்கரவாத் தடைச்சட்டத்தின் மூலமே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமே அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஐ.நாவின் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டைக்கு மத்தியில் எவ்வாறான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என இந்தக் கூட்டத்தில் கேள்வியெழுப்பபட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி சபைகளின் செயற்பாடற்ற தன்மையையும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இனி எவ்வாறு மக்களைச் சந்திப்பது என்ற நிலைமை உருவெடுத்துள்ளது. அதுமட்டுமன்றி கூட்டமைப்பு கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் வெளிப்படைத்தன்மையாக இயங்காத நிலைமைகள் நீடிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் மற்றும் சில முக்கியஸ்தர்களே இரகசியமாக சில விடயங்களை கையாள்கின்றமை வருத்தமளிப்பதாகவும் கூட்டமைப்பினுள் உட்கட்சி ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது பதிலுரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த காலத்தில் சில தேவைகளின் அடிப்படையிலேயே அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எதிர்வரும் காலத்தில் அவ்வாறான நிலைமைகள் தொடரமாட்டாது. எனினும், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குள் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு குழுவாகவே எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

Related Posts