Ad Widget

கூட்டமைப்பு ”ஈபிஆர்எல்எப்” “புளொட்” அமைப்புக்களை புறக்கணித்தது! நிஸா பிஸ்வால் சந்திப்பில் உறுதியானது!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் சார்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனோ, அன்றில் ஈ.பி.ஆர்.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனோ கலந்து கொள்ளவில்லை. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் அமைப்பின் சார்பில் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனோ கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து “ஈ.பி.ஆர்.எல்.எப்” தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது “எமது அமைப்புக்கு, அதாவது எனக்கோ, அன்றில் செயலாளர் சிவசக்தி ஆனந்தனுக்கோ எந்தவொரு அழைப்போ, தகவலோ வரவில்லை எனவும், அப்படி வந்திருந்தால் நாம் கலந்து கொண்டு இருப்போம்” எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை இதுகுறித்து “புளொட்” தலைவர் சித்தார்த்தன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது “எமக்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை” எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் உயர் ஸ்தானிகர்களையோ, வெளிநாட்டு ராஜதந்திரிகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சந்திக்கும் நிகழ்வுகளில் “புளொட்” அமைப்பின் பிரதிநிதிகளை கூட்டமைப்பு முற்றாக புறக்கணித்து வந்தது.

அப்போது “கூட்டமைப்பில் உள்ள கட்சித் தலைவர்களாக இருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே, இதுபோன்ற முக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமென கூட்டமைப்பினரால் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் தற்போது “புளொட்” அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச்சந்திப்பில் ரெலோ  தலைவர் செல்வம் கலந்துகொண்டிருந்தமை யும் இங்கு குறிப்பிடத்தக்கது

Related Posts