Ad Widget

கூட்டமைப்பு இனியும் வேடிக்கை பார்க்காது; – சுரேஷ்

suresh-peramachchantheranமஹிந்த அரசும் அதன் படைகளும் தமிழ் மக்களை காலுக்குக் கீழே போட்டு மிதிப்பதை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 30 வருடகால போரின் மூலம் அரசுதான் எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சர்களான சம்பிக்கரணவக்க, விமல் வீரவன்ஸ, பஸில் ராஜபக்­, டலஸ் அழகப்பெரும மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தான் வடக்கு இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பியை மாட்டத்துடிக்கின்றனர் என்றும் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை “வடக்கு இளைஞர்களுக்கான சயனைட் குப்பி’ என விமர்சித்துள்ளனர்.

அத்துடன், 30 வரு டகால போரின் மூலம் தமிழ்க் கூட்டமைப்பு எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் தமிழ், சிங்கள மக்களை நிரந்தரமாகப் பிரிப்பதற்கே அது முயற்சிக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமைச்சர்களின் இந்தக் கருத்துகள் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் நேற்று தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“நாட்டில் இனப்பிரச்சினை இருந்தபடியால்தான் 30 வருடகாலமாக ஆயுதப் போராட்டம் நீடித்தது. ஆனால், இந்த இனப்பிரச்சினைக்கு அரசு இன்னும் தீர்வைப் பெற்றுத்தரவில்லை. இதனால்தான் இந்த விவகாரம் அமெரிக்கா, இந்தியா என்று இறுதியில் ஐ.நா. வரைக்கும் சென்றுள்ளது.

இதிலிருந்து அரசுதான் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே பாடத்தைக் கற்றுவிட்டோம். இதைவிடுத்து, பொறுப்பற்ற விதத்தில் அமைச்சர்கள் கருத்துகளை வெளியிடுவது முட்டாள்தனமாகும்.

தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்பார்த்துதான் வடமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தயாரித்துள்ளோம். ஆனால், நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும்வகையில் அதை அமைச்சர்கள் கண்டபடி விமர்சிக்கின்றனர். இவர்களின் இந்த கருத்துகளைப்பற்றி கூட்டமைப்பும் தமிழ் மக்களும் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்.

ஏனெனில், நாட்டைக் கூறுபோடுவது எமது நோக்கமல்ல. இந்த நாட்டில் சிங்கள மக்களைப்போல சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்வதே எமது குறிக்கோளாகும்” என்றார்.

Related Posts