Ad Widget

கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் பேரவையை தமிழ் மக்கள் நிராகரிப்பர்! – சிவாஜிலிங்கம்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தால் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள்; குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்று தயாரித்து அதற்கமைய செயற்படுவதற்காக பல தரப்பினர்களையும், உள்ளடக்கியதாக தமிழ் மக்கள் பேரவையென்ற அமைப்பொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த அமைப்பு தொடர்பில், பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு தமிழ் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் பல கட்சிகளினதும் மற்றும் பொது அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் எனப் பலரும் அங்கம் வகிக்கின்றனர்.

கலை, கலாச்சாரம் என்பவற்றைப் பாதுகாத்து சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தயாரிப்பதற்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் இது கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டதாக சில தரப்பினர்கள் கூறினாலும் அவ்வாறு அந்த நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. குறித்த அமைப்பானது இவ்வாறு செயற்பட்டால் தமிழ் மக்களின் ஆதுரவு நிச்சயம் கிடைக்கும், ஆனால் கூட்டமைப்பிற்கு எதிராக அந்த அமைப்போ அல்லது அந்த அமைப்பின் உறுப்பினர்களோ செயற்பட்டால் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்புக்களே ஏற்படும்

இந்த அமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பில் நான் சார்ந்த கட்சியான ரெலோவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் நாங்கள் அதில் இணைந்து கொள்வது தொடர்பில் பரிசீலிப்போம். அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தேவைகளை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்குச் சார்பானதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த அமைப்பு தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு இந்த அமைப்பு கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்பட்டால் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பார்கள் என்றார்.

Related Posts