Ad Widget

கூட்டமைப்பில் போட்டியிட்டது நான் செய்த முட்டாள் தனம்: ரெமிடியாஸ்

Mureyappuதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்’ என முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தமரணியுமான முடியப்பு றெமிறிடியாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மல்லாகத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அன்றில் இருந்து யாழ்.மாநகர சபையில் உள்ள
கூட்டமைப்பின் 8 மந்தைகளையும் மேய்பததில் நான் பெரும் பாடுபட்டு வந்தேன்.

மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. எதற்கெடுத்தாலும் அதனை எதிர்ப்பது தான் இவர்களின் வேலையாக போய்விட்டது.

எனது வாழ்நாளில் நான் செய்த முட்டாள் தனமான செயற்பாடு என்றால் அது நான் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டதுதான். அதனால்தான் 2010 ஆம் ஆண்டிலிருந்து நான் மாநகர சபையில் தனித்து செயற்பட ஆரம்பித்தேன்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.

எங்கள் பிரச்சனையை யாருடன் பேசித்தீர்க்க வேண்டும், யாருடன் கதைத்தால் அது முடியும் என்ற நிலையில் தான் இன்று கூட்டமைப்பின் அரசியல் போய்க் கொண்டிருக்கிறது.

இலங்கை பிரச்சனைக்கு ஐ.நா மன்றத்தால் ஒன்றும் செய்து விடமுடியாது. இது கூட்டமைப்புக்கு ஏன் விளங்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அண்மையில் யாழிற்கு விஜயம் செய்த இந்திய குழு தமிழ் மக்களின் விடயத்தில் நீங்கள் அரசாங்கத்துடன் பேசியே தீர்வு காணவேண்டும். இந்தியா இங்கு ஒரு நெருக்கமான உறவைப் பேணிக்கொள்ள விரும்புகின்றது.

இது யாழப்பாணத்துடன் அல்ல இலங்கையுடன் தான் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்களிடம் என்ன விடயத்தினைச் சொல்லி வாக்கு கேட்கப்போகிறார்கள் என்று எமக்குத் தெரியும். சர்வதேசம் எம்மோடு நிற்கிறது. மக்கள் ஆணைவழங்கி அதனை நிரூபிக்கவேண்டும் என்பதே இவர்களி பிரசாரப்பொருளாக இருக்கப்போகிறது.

அழிந்துபோன எங்கள் பூமியை வளமானதாக மாற்ற வேண்டும் என்றால் மக்கள் சரியானவற்றை செய்யவேண்டும். அவ்வாறு நீங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் ஒரு வளம் நிறைந்த பிரதேசமாக வடக்கை மாற்றிக்காட்டுவோம்’ என்று அவர் தெரிவித்தார்.

Related Posts