கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்க ஊடுருவல் – பா.அரியநேத்திரன்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறுபட்டவர்கள் ஊடுருவி வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல்வேறுபட்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இந்த ஊடுருவலிலிருந்து விலகிச்சென்று எங்களின் அரசியல் பலத்தை தக்கவைக்கும் கட்சியை மக்கள் இனங்காணவேண்டும்’ என்றார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது பணியை திறமையாக ஆற்றிவருகின்றது. நாங்கள் எட்டு வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தவுள்ளோம். அந்த எட்டு வேட்பாளர்களையும் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், அவர்கள் நீங்கள் நினைக்கும் தகுதியில் இல்லையென்றாலும், அந்த கட்சிக்காவது நீங்கள் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

எனவே, எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை பலமடைய செய்யவேண்டியது இளைஞர்களின் கடமையாகும். இதன் மூலம் எதிர்வரும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக மாற்றம் பெற்று அடுத்தக்கட்ட அரசியலை நடத்துவதன் மூலமாக எதிர்கால இலட்சியங்களை அடையமுடியும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts