Ad Widget

கூட்டமைப்பின் பேச்சை கேட்பவர்கள் முட்டாள்கள் – வடக்கு ஆளுநர்

chandrasiriதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுபவற்றைக் கேட்பவர்கள் மூடர்கள் என்று திட்டியிருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி. ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநர் அரச தலைவர்களின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொள்வது தவறு என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள “சிறிலங்கா ருடே’ ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்துத் தான் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொல்லும் கருத்துக்களுக்கு செவிமடுப்பவர்கள் முட்டாள்கள். எவருடனும் எங்கு வேண்டு மானாலும் செல்வதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது. நான் ஜனாதிபதியைப் பிரதிநிதித்து வப்படுத்துவதால் எனக்கு அரசியல் உரிமை இருக்கிறது.

வடக்கை அபிவிருத்தி செய்வதில் ஜனாதிபதியுடனும் அவரது சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடனும் நான் பல சந்தர்ப்பங்களில் பயணித்திருக்கிறேன். அவர்கள் வடக்கில் இருக்கும் போது நான் அவர்களுடன் இருக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

“என்னுடைய பரப்புரைப் பணிகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படும் என்பது பற்றி நான் கவலைப் படமாட்டேன். நான் ஆளுநராக இருக்கையில் வடக்கின் எந்தப் பகுதிக்கும் நான் பயணிப்பதைக் கட்டுப்படுத்த இங்கு எந்தச் சட்டமும் கிடையாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளும் தரப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஆளுநர் கலந்துகொள்வது தேர்தல் விதி மீறல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளது. “இது தொடர்பில் ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் இருவேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. அதனால் இந்த விடயத்தை விசாரித்துச் சொல்லும் படி மனித உரிமைகள் ஆணைக் குழு கேட்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.

Related Posts