Ad Widget

கூட்டமைப்பின் அமைச்சு பதவிகள் தொடர்பாக கொழும்புக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம்

tnaவடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்று கொழும்பில் நடைபெறும் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், போனஸ் ஆசனங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டதைப் போன்று முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணத்தின் ஆட்சியை அமைக்கவுள்ளது. மாகாணசபையின் 4 அமைச்சுக்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற இரு போனஸ் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளிடையே தொடர் கலந்துரையாடல் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் போனஸ் ஆசனம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பதற்க்காகவும் முக்கிய முடிவுகள் எட்டுவதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் நேற்று முன்தினம் மாலை யாழ். நகரிலுள்ள விடுதியயான்றில் இடம்பெற்றது.

போனஸ் ஆசனங்களில் ஒன்றை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அ.அஸ்மினுக்கும் மற்றைய ஆசனத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி மேரிகமலா குணசீலனுக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் கட்சியின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை, 4 அமைச்சுப் பதவிகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய 4 கட்சிகளுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள் வழங்குவதென்று வழங்குவது என்றும் அவை 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும் எனவும் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

4 அமைச்சுக்களுக்கும் யார்யாரை நியமிப்பது என்பது குறித்து நாளை புதன் கிழமை கொழும்பில் கூடி முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலிலேயே யார் முன்பாக பதவியேற்பது, எப்போது பதவியேற்பது என்பது தொடர்பிலும் தீரமானிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Related Posts