Ad Widget

கூட்டமைப்பினர் மீது நெடுந்தீவில் தாக்குதல்; கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

tnaவடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவில் பிரசாரம் செய்தவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரே நடத்தினர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் பேர்னாட் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்தத் தாக்குதலுக்கும் ஈ.பி.டி.பிக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை என்று ஈ.பி.டி.பி. சார்பில் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் தவராசா கூறியுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவரான விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடியில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நேற்றுமுன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அந்த இடத்துக்குச் சென்ற 6 பேர் அடங்கிய குழுவினர் துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்து அருகிலிருந்த மலக்குழியில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

கூட்டமைப்புக்கு ஆதரவாக நெடுந்தீவில் பல வருடங்களாக வசித்து வரும் ரணசிங்க ஆரியசேன என்பவரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அன்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற குழுவினர், “கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வியா?” எனக் கேட்டு வீட்டுக் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதன்போது அங்கு நின்ற பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாக தான் தாக்கப்பட்ட சம்பவத்தை வைத்தியரிடம் கூறவில்லை என்றும் கூரையில் இருந்து விழுந்தேன் என்றே தெரிவித்தேன் எனவும் அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் பேர்னாட் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரியசேனவை பார்க்கச் சென்ற பின்னரே அவர் தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவர் தாக்கப்பட்டத்தை அறிந்து கொண்ட புலனாய்வுப் பிரிவினர் வைத்தியசாலைக்குச் சென்று அவரிடம் சம்பவம் தொடர்பில் விசாரித்ததுடன் வாக்கு மூலமும் பெற்றுச் சென்றனர்.

ஆரியசேனவை ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அடங்கிய குழுவினரே தாக்கினார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் பேர்னாட் குற்றம் சுமத்தி உள்ளார்.

தான் தாக்கப்பட்டமை குறித்து ஆரியசேன அச்சம் காரணமாகவே பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் அவர் மிகவும் பயந்துபோயுள்ளார் எனவும் பேர்னாட் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து ஈ.பி.டி.பியின் சார்பில் வடமாகாணத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் தவராசாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தச் சம்பவத்துக்கும் ஈ.பி.டி.பியினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எமது வேட்பாளர்களோ உறுப்பினர்களோ இவ்வாறான செயலில் ஈடுபடவில்லை.

சம்பவம் பற்றி நானும் கேள்வியுற்றேன். வீட்டு மதில் ஒன்றில் சுவரொட்டி ஒட்டப்பட்டமையால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெடுந்தீவு முழுக்கமுழுக்க ஈ.பி.டி.பியின் ஆதரவுக் கோட்டை என்பதால் அங்கு என்ன நடந்தாலும் குற்றச்சாட்டு ஈ.பி.டி.பியின் மீதே விழுகிறது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts