Ad Widget

கூட்டமைப்பினரே இனவாதத்திற்கு தீனி போட்டனர்: திஸ்ஸ

thissa‘சிங்கள மக்களுக்கு தீனி போட்டு இனவாத்தினை தூண்டுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளே’ என லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைளே சிங்கள மக்களின் இனவாத்தினை தூண்டுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பிரசாரத்திலும் கூட இனவாதம் தீவர மடைந்து விடுமோ என்ற கவலை உள்ளது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று 17 உள்ளூராட்சி சபைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்நிலையில், மத்திய அரசாங்கத்தினால், அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டிய நிலைகள் காணப்பட்டன.

அவ்வாறு இருக்கையில், நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று நிர்வாகம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சென்றால், வடக்கில் எந்த அபிவிருத்திகளும் நடைபெறாது போய் விடும் என்ற அச்சம் உள்ளது.

வடபகுதி மக்கள் கடந்த தேர்தலில் விட்ட தவறுகளை வடமாகாண சபை தேர்தலில் விடக்கூடாது. அரசாங்கம் சார்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் மாத்திரமே வடபகுதியில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

வடபகுதி மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து தற்போது நடைபெறும் அபிவிருத்திகள் மட்டுமல்ல நிறைய வேலைத்திட்டங்களையும், வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும்.

ஆரம்ப காலத்தில் லங்கா சம சமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, லங்கா சம சமாஜக் கட்சியும், இடது சாரி கட்சிகளும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்கள்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக எவரும் இருக்கவில்லை. ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களும் நடவடிக்கைளுமே தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற கோட்பாட்டை முன்னெடுத்து வைத்தார்கள்.

இந்நிலை மாற வேண்டும். கடந்த 25 வருடங்களாக தென் பகுதி மக்கள் அனுபவித்த அனைத்து வசதி வாய்ப்புக்களையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் அதாவது வடபகுதி மக்கள் சிந்தித்து அரசாங்க கட்சிகளை வெற்றிபெற செய்ய வேண்டும். வெற்றி பெறச் செய்வது தமிழ் மக்களின் கடமையாகும்’ என்றார்.

தொடர்புடைய செய்தி

மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதிகார பகிர்வினை அடைய முடியும்: திஸ்ஸ விதாரண

Related Posts