Ad Widget

கூட்டமைப்பினரால் ஏமாற்றப்படுகிறோம் – பருத்தித்துறை மரக்கறி வர்த்தக சங்க பிரதிநிதிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்திருந்த போதிலும் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வருகின்றோம் என பருத்தித்துறை மரக்கறி வர்த்தக சங்க பிரதிநிதிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

minister 09.02.20141

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவனாந்தாவின் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வர்த்தகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பருத்தித்துறை நகரப் பகுதியில் அமையப்பெற்றுள்ள அங்காடியின் மேற்தளத்தில் மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளின் போது தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் எடுத்துரைத்துள்ளனர்.

குறித்த அங்காடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் கடைத்தொகுதியும், மேற்தளத்தில் மரக்கறி கடைத் தொகுதியும் இருப்பதனால் நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் தமக்கு கீழ்தளத்தில் மரக்கறி கடைத்தொகுதிகளை அமைத்து தருமாறு நகரசபைத் தலைவரிடம் தாம் கோரியிருந்த போதிலும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தாத நகரசபைத் தலைவர் தமது கோரிக்கைக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் மரக்கறி வர்த்தகப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘குறித்த விடயம் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தரும் வரையில் மாற்று ஏற்பாடாக சந்தைக்கு அருகாமையிலுள்ள காணியில் தற்காலிகமாக மரக்கறி சந்தையை நடத்துவதற்கும் வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் அசௌகரியங்கள் ஏற்பாடாத வகையில் நியாயத்தின் அடிப்படையில் தீர்வு பெற்றுத் தரப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் எமது கோரிக்கைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்தவகையில், குறித்த அங்காடிக்கான கட்டிடத்தின் அமைப்பானது கீழே மரக்கறி வர்த்தகத்தையும், மேலே கடைத்தொகுதியையும் கொண்டமைந்ததாக அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வர்த்தகர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.

அத்துடன், நகரசபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வெவ்வேறு பெயர்களில் குறித்த அங்காடியில் கடைகளை பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே மரக்கறி வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன், ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி இணைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருதனர்.

Related Posts