Ad Widget

குவிவு வில்லைகள் உடைப்பு

காங்கேசன்துறை வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவும் மற்றும் நாவலர் வீதி பாப்பையா கடைச் சந்தி ஆகியவற்றில் அமைக்கப்பட்ட குவிவு வில்லைகள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டது.

கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீதியும் சந்திக்கும் சந்தி, கஸ்தூரியார் வீதியும், கன்னாதிட்டி வீதியும் சந்திக்கும் சந்தி, கஸ்தூரியார் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தி, கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் சந்தி, மடத்தடி வீதியும் திருக்குடும்ப கன்னியர்மட வீதியும் சந்திக்கும் சந்தி, வேம்படி வீதியும் துரைச்சாமி வீதியும் சந்திக்கும் சந்தி, பருத்தித்துறை வீதியும் பலாலி வீதியும் சந்திக்கும் சந்தி. கே.கே.எஸ் வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் சந்தி, பாப்பையா கடைச் சந்தி ஆகிய இடங்களில் இந்த குவிவு வில்லைகள் பொருத்தப்பட்டன.

யாழ்ப்பாண வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன சாரதிகள் அவதானிக்கும் வகையில் இந்த குவிவுவில்லைகள் பொருத்தப்பட்டன.

எனினும், மேற்படி குவிவு வில்லைகள் சரியான பார்க்கும் கோணம் மற்றும் திசைகளில் பொருத்தப்படவில்லையெனவும், இதனால் இதில் பயன் எதுவும் இல்லாமல் இருப்பதாகவும் பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. முகம் பார்ப்பதற்கு வைத்ததைப் போல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு பொருத்தப்பட்ட இரண்டு குவிவு வில்லைகள் உடைக்கப்பட்டுள்ளன.

Related Posts