Ad Widget

குழந்தையை பிரசவித்த தாய் உயிரிழப்பு: கணவன் பொலிஸில் முறைப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்து அவரது கணவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குருபரன் பிரசாந்தி என்ற இளந்தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரது கணவன் தெரிவித்தபோது, ‘இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 12 ஆம் திகதி எனது மனைவியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தேன்.

அதன்பின்னர் 13 ஆம் திகதி பிரசவம் இடம்பெற்று தாயும் குழந்தையும் நலமாகவே காணப்பட்டனர். உணவு உட்கொண்டு தேக ஆரோக்கியத்துடன் என்னுடன் கதைத்துப் பேசினார்.

எனினும் நேற்றிரவு திடீரென அவர் உயிரிழந்தமையானது எனக்குச் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

பொலிஸ் நிலையத்திலும், வைத்தியசாலைப் பணிப்பாளரிடமும் முறைப்பாடுகள் செய்துள்ளேன்’ எனத் தெரிவித்தார்.

இதுவிடயந் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் வினவியபோது, ‘கடந்த 12 ஆம் திகதி குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சேர்க்கப்பட்டதன் பின்னர் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது அவர் அந்த பிரசவத்திற்காக 24 முதல் 28 வாரங்களையே கடந்திருந்தார். அதாவது 6 முதல் 7 மாதக் குழந்தையையே வயிற்றில் சுமந்திருந்தார்.

எனினும் பிரசவத்திற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் காணப்பட்டன.தாயின் இரத்த மாதிரி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதன்போது தாய்க்கு இரத்தப் புற்றுநோய் காணப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனை அவரது கணவருக்குத் தெரியப்படுத்தினோம். இரத்தப் புற்றுநோய் காணப்பட்டமையால், இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்பட்டது.எனினும் அவர் குழந்தையை பிரசவித்தார்.

குழந்தை ஒரு கிலோகிராமிற்கு குறைவாகவே காணப்பட்டது. குறைமாதக் குழந்தை என்பதால் நிறையும் குறைவாகவே காணப்பட்டது.

பிரசவத்தின் பின்னர் தாய்க்கு இரத்த போக்கு தொடர்ந்து காணப்பட்டது.இரத்தத்தத்தை உறைய வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இரத்த போக்கை நிறுத்த முடியவில்லை. இரத்தத்தில் வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் அவர் உயிரிழந்தார். குழந்தையும் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts