Ad Widget

குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் : வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவினை முழுமையாக வழங்க வேண்டுமென வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ பொதுமக்களிடம் இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த செயற்பாட்டுக்கு மக்களும் தங்களது முழு பங்களிப்பினை வழங்குவார்களாயின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய உதவியாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அதிகளவில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் இன்று காலை பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிரேஸ்ட பொலிஸ் அத்துயட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அத்துண்டுப்பிரசுரத்தில் பொலிஸ் அறிவித்தல் எனக் குறிப்பிடப்பட்டு, யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்ய உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்றும் வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் 0766093030 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் அத்துண்டுப் பிரசுரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts