Ad Widget

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கிராம அலுவலர்களை பொலிஸ் கடமையில் ஈடுபடுத்த பரிந்துரை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, கிராம அலுவலர்களை பொலிஸ் கடமை புரியும் அதிகாரிகளாக நியமனம் செய்யுமாறு அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையையடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு பரிந்துரைத்திருக்கின்றார்.

அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அதிக அளவில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் மட்டும் கடமையைச் செய்தால் போதாது. மக்களின் ஒத்துழைப்பும், அவர்களின் சமூக உணர்வும் பொலிஸாருக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்லாமல் தடுக்க முடியும் என்று நீதிமன்றம் நம்புகின்றது.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் அடங்கும் வலயங்களான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களையும், குற்றவியல் நடவடிக்கைச் சட்டக் கோவையின் 2 ஆம் பிரிவின் கீழ் பொலிஸ் கடமையாற்றுகின்ற சமாதான அதிகாரிகளாக, எழுத்து மூலம் நியமனம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது.

கிராம சேவையாளர்களை பொலிஸ் கடமைபயாற்றுகின்ற சமாதான அதிகாரிகளாக அந்தந்த மாவட்டத்தின் அரசாங்சக அதிபரே நியமனம் செய்ய வேண்டும் என்று குற்றவியல் நடவடி சட்டக் கோவையின் 2ஆம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே, இந்த சட்டப் பிரிவின் கீழ், இதற்கான நியமனங்களை இந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் செய்ய வேண்டும். இத்தகைய நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர், கிராம சேவையாளர் பிரிவுதோறும், தேவையான சமாதான குழுக்கள், விழிப்புக்குழுக்கள் மக்கள் குழுக்கள் என்பவற்றை நியமிப்பதற்கு, பிரதேச செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் துணையுடன் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது.

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் கட்டளைச் சட்டம், குற்றவியல் நடவடிக்கை கோவை என்பவற்றை விளங்கப்படுத்தி ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு முடியுமானால், அவற்றை அடியோடு ஒழிப்பதற்கு அவர்களின் உதவியைப் பெற்று நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது.

கிராமசேவையாளர் பிரிவுகளில் இடம்பெறுகின்ற, பொதுக்குற்றங்கள், சிறுகுற்றங்கள், கலாசார சீர்கேட்டு குற்றங்கள், சமூகவிரோத குற்றங்கள், மற்றும் மரக்கடத்தல் மணல் கடத்தல் கசிப்பு விற்பனை, ஆடுமாடு கடத்தல், போதைவஸ்து விற்பனை, விசேடமாக பாடசாலை மாணவர்களுக்குப் போதைவஸ்து விற்பனை செய்யும் சமூகவிரோதக் குற்றம் என்பவற்றைக் கட்டுப்படுத்தவும், முற்றாக இல்லாதொழிப்பதற்கும் தேவையான தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்படுகின்ற சமாதான குழுக்கள், விழிப்புக்குழுக்கள், மக்கள் குழுக்கள் என்பவற்றில் அங்கம் வகிக்கும் எவரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. அதற்கு அனுமதியில்லை. அவர்கள் தங்கள் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எடுக்கின்ற நடவடிக்கைகளில், கிராம சேவையாளர் மற்றும் பொலிஸாருக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருந்து செயற்பட வேண்டும் என அந்தத் தீர்ப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், இந்த மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து கிராமசேவையாளர்கள் என பலருக்கும், யாழ் மேல் நீதிமன்றத்தினால் இந்தப் பரிந்துரை தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts