வடக்கு மாகாணத்தில் முன்னரும் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றதாகவும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்திலேயே குற்றச் செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன என வடக்கு மாகாண முதல்வர் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கில் முன்னரும் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றன. போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததனால் ஊடகங்கள் அதனை வெளியிடவில்லை.
இப்போது அங்கே ஊடக சுதந்திரம் உள்ளது. அதிகளவு ஊடக வாய்ப்புக்களும் உள்ளன. இதனால் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின்றன.
ஒவ்வொரு நாளும் வடக்கில் பெருமளவில் கேரளக் கஞ்சா கைப்பற்றப்படுகின்றது. ஆனால் இது தொடர்பில் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதில்லை.
வடக்கில் அண்மைக்காலமாக குற்றச்செயல்களும் வன்முறைகளும் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். ஆயர் தலைமையிலான குழுவொன்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே, வடக்கு மாகாண ஆளுனர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.