Ad Widget

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோருகிறது பொலிஸ்

வாள்வெட்டுக் கும்பல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தமக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கி உதவுமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ கேட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை இரகசியமாக தொலைபேசியிவோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்குமாறு, அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் தலையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

“வன்முறைச் சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (17) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில், பொலிஸாரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 5 ஆயிரம் பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன.

வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொது மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். தற்போது வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு செயற்பட்டால், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும். அதேநேரம் மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டறிக்கைகள் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன.

எனவே, குறிப்பிட்ட பொலிஸ் நிலையப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுக் கும்பல்களைக் கட்டுப்படுத்த தகவல் அறிந்த பொது மக்கள் தொலைபேசி மூலமும், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகவரிக்கும் தனிப்பட்ட முறையில், இரகசியமாக தகவல்களை வழங்க முடியும்.

இதன் ஊடாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை இலகுவாகக் கட்டுப்படுத்த முடியும்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.

Related Posts