Ad Widget

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இருவர் விடுதலை!

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நெல்லியடி பிரதேசத்தில் அதிகாலை 4 மணியளவில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களையே இவ்வாறு விடுதலை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

நெல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான ஜெயக்குமார் பேரின்பராஜா, தேவமனோகரன் சதீஸ்கரன் என்ற இரண்டு இளைஞர்களுமே, நெல்லியடியில் இயங்கி வந்த சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 6 இராணுவத்தினரால் சைக்கிள்களில் துப்பாக்கி சகிதம் சென்று கொண்டிருந்த வேளை, கைது செய்யப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுடுபடைக் கலன் சட்டத்தின் கீழ், அவசரகாலச் சட்டத்தின் 36 (1), 36 (5) ஆகிய பிரிவுகளுக்கமைவாக சட்டமா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த இளைஞர்களைக் கைது செய்த 6 இராணுவத்தினரில் ஒருவராகிய ரட்நாயக்க முதியன்சலாகே அபேசிங்க நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் –

சம்பவ தினத்தன்று தாங்கள் 6 இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, இந்த இளைஞர்கள் இருவரையும் ரீ56 ரக துப்பாக்கி, மகசின்கள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்து தமது இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றனர் எனவும் அங்கிருந்த தமது இராணுவ உயரதிகாரியின் கட்டளைக்கமைவாக அந்த இரண்டு பேரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று அவர்களிடம் பாரப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன், இந்த வழக்கில் பாரிய குறைபாடுகள் உள்ளதாகத் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளான இரண்டு பேரும் 6 இராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கைது செய்யப்பட்டவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட இராணுவத்தினரில் 4 இராணுவ வீரர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், அவர்கள் வழக்கு விசாரணைகளின்போது, நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கவில்லை. இது முக்கியமான முதலாவது குறைபாடு.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் எதிரிகளைக் கையளித்தபோது சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட 6 இராணுவ வீரர்களில் இரண்டு பேர் மட்டுமே பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவ்களில் ஒருவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் சமூகமளிக்கவில்லை. சாட்சியமளிக்கவுமில்லை. இது இரண்டாவது முக்கிய குறைபாடாகும்.

இந்த வழக்கில் தடயங்களாக சமர்ப்பிக்கப்பட்ட பொருள்களின் மீது நடத்தப்பட்ட இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, ஆவணமாக்கப்பட்டபோது, அது இலக்கமிடப்படவில்லை. இது மூன்றாவது முக்கியமான குறைபாடாகும்.

இந்த சம்பவத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட ரீ56 ரக துப்பாக்கி, எதிரிகள் மீது குற்றம் சாட்டத்தக்க வகையில், சுடுபடை கலன் சட்டத்திற்குள் அடங்குகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அந்த வினாவுக்கு வழக்கு விசாரணையில் விடை இல்லை. ஆகவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 இராணுவத்தினரில் ஒரேயொரு சாட்சியாகிய இராணுவ வீரர் ரட்நாயக்க முதியன்சலாகே அபேசிங்க என்ற இராணுவ வீரரின் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்திற்கு ஒப்புறுதி சாட்சியம் எதுவும் இல்லை. ஆகவே, இந்த வழக்கில், வழக்குத் தொடுனர், நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எதிரிகள் குற்றம் புரிந்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கத் தவறியுள்ளார் என்று நீதிபதி தமது தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகள் இருவரும் குற்றவாளி கூண்டில் ஏறி சத்தியப்பிரமாணத்தின் அடிப்படையில் சாட்சியமளித்தனர்.

ஊர் வாலிபர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த மோதல்கள் காரணமாக தங்களை எல்.ரீ.ரீ. ஆதரவாளர்கள் என குறிப்பிட்டு எழுதப்பட்ட மொட்டைக் கடிதத்தின் அடிப்படையிலேயே தாங்கள் கைது செய்யப்பட்டனனர் எனவும் இராணுவ வீரர் அபேசிங்க தனது சாட்சியத்தில் தெரிவித்தபடி, எதுவித சம்பவமும் நடைபெறவில்லை என்றும், தங்களிடமிருந்து துப்பாக்கியோ அதற்குரிய மகசின் மற்றும் தோட்டாக்களோ எதுவுமே கைப்பற்றப்படவில்லை என்றும் எதிரிகள் இருவரும் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள, அவசரகாலச் சட்ட விதியின் கீழ் சுடுபடை கலனாகிய ரீ56 ரக துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எண்பிப்பதற்கு – நிரூபிப்பதற்கு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ சாட்சிகளை அழைக்காமல் விட்டமை, இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை இலக்கம் இடாமல் விட்டமை மற்றும் இரசாயன பகுப்பாய்வாளரை சாட்சியாக அழைக்காமல் விட்டமை ஆகியவற்றுடன், எதிரிகளிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்ற இராணுவ வீரரின் சாட்சியத்தை ஒப்புறுதி செய்வதற்கு எந்தவிதமான சாட்சியமும் இல்லை என்பதன் அடிப்படையில் எதிரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படட்ட குற்றச்சாட்டை, நியாயமான அளவு சந்தேகத்திற்கப்பால் வழக்குத் தொடுநர் எண்பிக்க – நிரூபிக்கத் தவறியுள்ளார் என தெரிவித்து, எதிரிகள் இருவரையும் நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Related Posts