Ad Widget

குறுந்திரைப்பட போட்டிக்கு ஆக்கங்கள் கோரல்

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் அவர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் பரவலான செய்திகள் வருகின்றன.

இந்நிலையை தவிர்ப்பதற்கும் சமூகத்தில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இலகுவில் சென்றடையக் கூடியதுமான வகையில் குறும்படங்களை தயாரித்து வெளியிடவுள்ளோம்.

அந்த வகையில், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சமூகப் பிரச்சினைகள், விதவைகள் தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பெண்களைத் தலைமைக் குடும்பமாகக் கொண்டு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஆகிய கருப்பொருட்களைக் கொண்டதாகவே குறும்படங்கள் தயாரிக்கப்படவேண்டும்.

இதன் முதற்கட்டமாக மேற்குறித்த கருப்பொருள் உள்ள சிறந்த குறும்பட எழுத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த எழுத்துருக்கள் போட்டித் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்குரிய கலைஞர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்படும்.

தெரிவாகும் கலைஞர்கள் தமது எழுத்துருக்கான குறும்படங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தயாரித்து ஒப்படைக்கப்படவேண்டும்.

மேலும் தயாரிக்கப்படும் குறும்படம் 10 நிமிடங்களுக்குக் குறையாமலும் 15 நிமிடங்களுக்கு மேற்படாதவையாகவும் இருத்தல் வேண்டும்.

குறித்த குறும்பட தயாரிப்பு எழுத்துருக்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், சுகாதார அமைச்சு, வடக்கு மாகாணம், சுகாதார கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறவிரும்புவோர் 021-2220804 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளமுடியும் என்றார்.

Related Posts