Ad Widget

குறிகாட்டுவானிலிருந்து கொழும்புக்கான வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சேவை ஆரம்பம்

தீவக மக்களின் நலன்கருதி குறிகாட்டுவானிலிருந்து கொழும்புக்கான வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

00000bus2

குறிகாட்டுவான் சந்தியிலிருந்தான இச்சேவை நேற்றய தினம் (19) சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தாம் கொழும்புக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இச்சேவையை தொடங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இதனடிப்படையில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவும் கலந்துரையாடியதன் அடிப்படையிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய யாழ்.சாலைக்கு புதிய பேருந்துகள் தருவிக்கப்பட்டன.

இந்நிலையில் குறிகாட்டுவானிலிருந்து கொழும்புக்கான பேருந்து சேவை சுபநேரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட அதேவேளை, சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் அவர்கள் முதலாவது பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது அங்கு கூடியிருந்த தீவக மக்கள் குறித்த சேவையை ஆரம்பித்த வைத்த அமைச்சர் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

குறித்த பேருந்து நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து புறப்பட்டு ஊர்காவற்துறை, யாழ்.பேருந்து நிலையம் குருநாகல் பாதை வழியாக கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை ஊடாக இரத்மலானையை சென்றடையும்.

இதேவண்ணம் இரத்மலானையிலிருந்து இரவு 8.00 மணிக்கு பயணிக்கும் பேருந்து குறித்த பாதை வழியாக பயணித்து குறிகாட்டுவானை சென்றடையும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் கிடைக்கப் பெற்ற இச்சேவை மூலம் தீவக மக்கள் அதிக நன்மைகளைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா (போல்), இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை முகாமையாளர் குலபாலச்செல்வம், வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் புவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts