Ad Widget

குதிரைகள் கடத்தப்படுவதற்கு விரைவில் தீர்வு

அரேபியர் ,ஒல்லாந்தர், போத்துகேயர் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

hourse-kutherai

நெடுந்தீவில் உள்ள குதிரைகளை கொண்டு வந்து இராணுவத்தினருடைய விருந்தினர் விடுதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1833ம் ஆண்டுக்கு முன்பு கச்சேரி – அலுவலர்களை நியமித்து அங்குள்ள குதிரைகளை பராமரித்து வந்தனர். 1833ம் ஆண்டு அங்கு நடைபெற்று வந்த கச்சேரி மூடப்பட்ட பின்பு அங்குள்ள குதிரைகள் அநாதரவாக தரவைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.

சப்த தீவுகளில் பெரும் தீவான நெடுந்தீவுக்கு பெருமை சேர்க்கும் அடையாளச் சின்னமாகவும் இலங்கையின் முக்கியமான மரபுரிமை சொத்துகளாகவும் வரலாற்று அடையாளங்களாகவும் சுற்றுலா பயணிகளை கவருவனவாகவும் குதிரைகள் இருக்கின்றன.

நெடுந்தீவுக்கு அண்மையில் சென்ற இலங்கை வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நெடுந்தீவிலுள்ள குதிரைகளை பார்வையிட்டதோடு குதிரைகள் நீர் அருந்துவதற்கு வசதியாக குடிநீர்த்தொட்டிகளை அமைப்பதுடன் குதிரைகள் மேய்வதற்கு குயின் ரவரினை அண்டிய காட்டுப்பிரதேசத்தில் நல்லின புற்களையும் உண்டாக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

இவை ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் அண்மையில் மீண்டும் நெடுந்தீவு சென்ற வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அங்குள்ள குதிரைகளின் இரத்த மாதிரியை பரிசோதித்த போது இவை நல்லின குதிரைகள் என நிரூபித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்படையினர் தங்களின் சீ-காட் படகுகள் மூலம் இரு கட்டங்களாக ஆறு குதிரைகளை ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ சுற்றுலா விடுதிகளில் விட்டுள்ளனர்.

எனவே கடற்படையின் இச்செயலால் கொதித்தெழுந்த நெடுந்தீவு மக்கள் இது விடயமாக எம்மிடம் கடும் ஆட்சேபனையை தெரிவித்து முறையிட்டுள்ளனர். இந்தநிலையில் வடக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன சுற்றுசூழல் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவர்களின் கவனத்திற்கு நான் இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள நிலையில் கடற்படையின் இத்தகைய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என அவரும் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவிலிருந்து அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ கொண்டு சென்ற குதிரைகளை அங்கேயே மீண்டும் கொண்டு சென்று விட வேண்டும் என கோருகின்றோம். அத்தோடு எதிர்வரும் 11ஆம் திகதி விவசாய அமைச்சரும் நானும் குதிரை கடத்தல் தொடர்பாக ஆராய்வதற்கும் எதிர்வரும் காலங்களில் அங்கிருந்து குதிரைகளை கடத்த முற்படுவதை தடுப்பதற்கான ஏற்பாட்டையும் மேற்கொள்வதற்காக நெடுந்தீவு செல்லவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts