Ad Widget

குடா நாட்டில் விசேட அதிரடிப் படை குவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலை அடுத்து அங்கு வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ். மாவட்டத்தில் பொலிஸார் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுத்தப்படாமல் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கலகம் தடுப்பு பொலிஸாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். நகரப் பகுதியிலும் நகருக்கு வெளியும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து அங்கும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையளினர் களமிறக்கப்பட்டு இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பொலிஸார் மட்டுமே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரினால் மாணவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரியும் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts