Ad Widget

குடாநாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேண பறக்கும் பொலிஸ் படையணியை உருவாக்க அறிவுறுத்தல்!

யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் இந்த அறிவுறுத்தல் வெள்ளியன்று வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் அதிமுக்கிய திருவிழாக்களில் ஒன்றாகிய நல்லூர் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகின்ற சூழலில், கடந்த ஒரு வார காலமாக யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுக் கொலைகள், கொலை முயற்சி, படுகாயம் ஏற்படுத்தவல்ல தாக்குதல் சம்பவங்கள் சில இடங்களில் தலை தூக்கியிருக்கின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய யாழ் குடாநாட்டுக்கான உயர் பொலிஸ் அதிகாரிகள் நீதிபதி இளஞ்செழியனை அவருடைய அலுவலகத்தில் முன்னிலையாகி எடுத்துரைத்தனர். அதனைச் செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன் கடந்த ஒருவாரத்திற்கு முந்திய மூன்று மாத காலப்பகுதியில் யாழ். குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை சீரான முறையில் தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் திருப்திகரமான முறையில் வைத்திருந்த பொலிசாரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் அந்த அமைதி நிலைமை இப்போது தலையெடுத்துள்ள சில குற்றச்செயல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அவற்றைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்கு விரைவுச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை ஒன்றை உருவாக்கி பறக்கும் படையாக பொலிசாரைச் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் குடாநாட்டின் முக்கிய பொலிஸ் உயரதிகாரிகளிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். குடாதாட்டில் திடீரென வாள்வெட்டு அதன் காரணமாக கொலை, கொலை முயற்சி, வெட்டுக்காயங்கள் ஒரு கிழமையில் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலைமையை வளரவிடக் கூடாது

இம்மாதம் 29, 30, 31 ஆகிய தினங்களில் ஆவணி மாதம் 29, 20, 31 ஆகிய 3 தினங்கள் நல்லூர் ஆலயத்தின் முக்கிய உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழர்கள் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் சட்டம் ஒழுங்கை சீராக மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதுவிதமான குற்றச் செயல்களும் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குற்றச் செயல்கள் நடைபெற்றால் உடனடியாக அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதிவேக நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக யாழ் பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கட்டுப்பாட்டில் துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணி ஒன்றை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும்.

குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற இடத்திற்குத் துரிதமாக பொலிசார் பறக்கும் படையணியாக விரைந்து சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த நடவடிக்கை அவசியமாகியிருக்கின்றது.

குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்தல், குற்றச்செயல்கள் இடம்பெறா வண்ணம் தடுத்தல், குற்றம் புரிபவர்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இந்தப் படையணி விரைந்து செயற்பட முடியும். ஆகவே, இத்தகைய பறக்கும் படையணியாக யாழ்.குடாநாட்டு பொலிசார் செயற்படுவதற்கு இந்த நடைமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

விரைவுச் செயற்பாட்டு பொலிஸ் படையணியானது, யாழ்.குடாநாட்டின் எந்த பொலிஸ் நிலைய பிரதேசமாக இருந்தாலும் பிரதி பொலிஸ் மா அதிபர் அல்லது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலில் அங்கு பறக்கும் படையாகச் செயற்பட வேண்டும்.

குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். வேறு மாவட்டத்திற்கு சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது. வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவும் இடமளிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று சந்தேக நபர்கள் நாட்டைவிட்டு வெளியேறாத வண்ணம் விமான நிலையத்தில் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேவேளை, கடல்வழியாக சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முடியாத வண்ணம் கடற்படையை தயார் நிலைக்குக் கொண்டு வர வேண்டியதும், பொரிசாரின் பொறுப்பாகும்.

அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளையும் அதிவேகமாகச் செயற்பட்டு பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய கட்டளை பிறப்பிக்க வேண்டும்.

கொலை கொள்ளை, கற்பழிப்பு, வாள்வெட்டு போதைப் பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் விசாரணைகள் நடத்துவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் கிராம சேவையாளர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த 3 மாத காலமாக அமைதி நிலவிதைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டு மக்கள் பொலிசார் மீது வைத்திருந்த நம்பிக்கையை இந்த ஒரு வாரமாக இடம்பெற்ற சில சம்பவங்கள் சீர்குலைத்தவிட்டன. குற்றச் செயல்;களில் ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ் குடாநாட்டு மக்கள் அமைதியாக வாழ பொலிசார் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, யாழ் குடாநாட்டில் அமைதியைப் பேணுவதற்கு துரிதமாகப் பொலிசார் செயற்படுவார்கள் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது, யாழ் குடாநாட்டுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் நீதிபதியிடம் உறுதியளித்தார்.

Related Posts