Ad Widget

குடாநாட்டில் கடல்நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டன

dampகுடாநாட்டில் மழை வெள்ளம் தேங்காதவாறு தொண்டமானாறு, அராலி, அரியாலைப் பகுதிகளில் உள்ள கடல் நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மழை வெள்ளம் கடலுக்குள் செலுத்தப்படுகின்றது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தொண்டமானாறு குடாக்கடல் நீரே தடையில் உள்ள கதவுகளும், அராலி நீரேரி தடைக் கதவுகளும், அரியாலை கடல் நீரேரி தடைக் கதவுகளும் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதியில் மற்றும் பயிர்ச் செய்கை நிலங்களில் தேங்கி நிற்காத அளவுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தடைப் பகுதியிலும் சராசரி ஐந்து கதவுகளுக்குக் குறையாமல் திறந்துவிடப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பிற்பகலிலும், புதன்கிழமை அதிகாலையிலும் கதவுகள் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு திறக்கப்பட்டன.

இதனால் மழை வெள்ளம் கடலை நோக்கிச் செல்கிறது. மழையின் அளவு அதிகரிக்குமிடத்துக் கூடுதலான எண்ணிக்கை அளவு கதவுகள் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

கடல் நீரேரி கதவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் குடாநாட்டின் தரைகளில் காணப்படும் உவர் தன்மையையும் நீர்நிலையில் காணப்படும் உப்புத் தன்மையையும் குறைத்துப் படிப்படியாக பயிர்ச் செய்கை மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையிலும் மாற்றுவதே.

அந்த நோக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி அடைந்துள்ளோம். எதிர்காலத்தில் முழுமையான மாற்றத்தை நோக்கியே இந்த வேலைத் திட்டம் தொடர்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts