Ad Widget

கீரிமலையை அடுத்து யாழ்.திருவடிநிலையில் காணி சுவீகரிப்பிற்காக நில அளவை?

கீரிமலை பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் யாழ். திருவடிநிலை பகுதியில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – திருவடிநிலை பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேவைகளுக்கு எனக் கூறி மக்களுக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் கீரிமலை, சேந்தாங்குளம் பகுதியில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட காணி அளவிடும் நடவடிக்கை பொது மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

பொதுமக்களுக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய கடற்படையினர் மற்றும் நில அளவையாளர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

நில அளவையாளர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்த, நிலையில் காணி உரிமையாளர்கள் மற்றும் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சஜீவன், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் அங்கு ஒன்று கூடியதுடன் காணி அளவீட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அளவீட்டு பணிகளை நிறுத்தி நில அளவையாளர்கள் திரும்பிச் சென்றதுடன் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பை தெரிவித்த மக்களை கடற்படையினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts