Ad Widget

கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை. அது திட்டமிட்டபடி நடக்கும். எவரும் பயப்படாமல் அதில் கலந்துகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற 500 சிவாச்சாரியர்கள் கீரிமலைக்கு வருகை தரவுள்ளனர். பிதிர்கடன் நிறைவேற்ற வரும் மக்களின் போக்குவரத்துக்காக 5 மாவட்டங்களிலுமிருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2, 000 பேர் பிதிர்க்கடன்களைச் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றல் நடைபெறும். அதன் பின்னர் நகுலேஸ்வரத்தில் யாகம் நடைபெற்று அதன் பின்னர் உருத்திராபிஷேகம் நடைபெற்று, மோச்ச தீபம் காட்டப்படும்.

பிதிர்க்கடன் நிறைவேற்றத் தேவையான சகல பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் தாங்கள் விரும்பினால் பொருட்களை கொண்டு வரலாம். அல்லது அங்கு கொடுக்கும் பொருட்களை பாவிக்கலாம் எனவும் துவாரகேஸ்வரன் கூறினார்.

Related Posts