Ad Widget

கிழக்கு மாகாண ஆட்சியில் மீண்டும் குழப்பம்

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் ஆளும் தரப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது.

slmc_epc_east_provincial_council

ஏற்கனவே ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் தமது ஆதரவை விலக்கிக் கொண்டு எதிர்கட்சியாக இயங்க முடிவு செய்துள்ளனர்.

குறித்த 10 பேரும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செயற்படவுள்ளார்கள்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசியக் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேசிய சுதந்திர முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 10 பேரும் அம்பாறையில் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் மாகாண அமைச்சர்களில் ஒருவரான தேசிய காங்கிரஸை சேர்ந்த எம். எஸ். உதுமான் லெப்பை தெரிவித்தார்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கும் இடையிலான உடன்படிக்கையின் படி முதலமைச்சர் பதவி மட்டுமே இரண்டரை ஆண்டு பதவிக் காலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அந்த ஒப்பந்தத்தை மீறி ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்து ஆட்சி அமைத்துள்ளதாக உதுமான் லெப்பை கூறுகின்றார்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உடன்படிக்கையை மீறிய செயல் மற்றும் போட்டிக் கட்சிகளை ஓரங்கட்டும் செயல்கள் காரணமாகவே தாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவரால் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையின் இயலாமையும் பலவீனமும் இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என்கின்றார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்.

‘எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தாலும் மக்களுக்கு பயன்தரக் கூடிய விடயங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்’ என்றும் அவர் கூறுகின்றார்.

Related Posts