Ad Widget

கிழக்கு ‘எழுக தமிழ்!’ பேரணிக்கு ஒத்துழைப்பு தாரீர்!!

தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை – 2016-12-20

அவசர வேண்டுகோள்:
பிரிக்கப்படாத தமிழ் தேசத்துக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தும் கிழக்கு ‘எழுக தமிழ்!’ பேரணிக்கு ஒத்துழைப்பு தாரீர்!!

அன்புடையீர்:

தமிழ் தேசத்தின் ஏகோபித்த அரசியல் அபிலாசையினைப் பிரதிபலித்த முதலாவது ‘எழுக தமிழ்!’ அரசியற் பேரணி, கடந்த செப்ரெம்பர் 24ஆம் திகதி வடக்கில் – யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடந்தேறியிருந்தது.

தமிழ் தேசத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டதான ஓரு நிரந்தர அரசியற் தீர்வினை வலியுறுத்தியும், பல தசாப்த கால அடக்குமுறை மற்றும் பல்லாண்டு காலப் போரினது விளைவுகளாகத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வினை வலியுறுத்தியும், தமிழ் தேசத்தின் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்டுவரும் இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தியும் – பல்லாயிரம் தமிழர்கள் அந்த முதலாவது ‘எழுக தமிழ்!’ பேரணியில் அணிதிரண்டனர்.

தாயகத்தில் வாழும் மக்களினது பங்கேற்பு மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களினது பேராதரவுடனும்தான் – அந்த மாபெரும் வெற்றி சாத்தியமானது. வேறுபாடுகளை மறந்து – தமிழ் தேசத்தின் பிறப்புரிமைகளுக்காக – ஒரே நோக்கோடு அனைவரும் ஒன்றிணைந்தது ஒரு சிறப்பு அம்சமாகும். குறிப்பாக – ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த ஏழாண்டு காலத்தில் முதற்தடவையாக – பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது அரசியற் பிறப்புரிமையினை வலியுறுத்தி – ஒரேயடியாக வீதிக்கு இறங்கியது ஒரு வரலாற்று நிகழ்வாகும். சர்வதேச சக்திகளுக்கு அந்தப் பேரணி சொல்லிய செய்தி மிகக் காத்திரமானது.

இலங்கையின் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் – தமிழ் தேசத்திற்குப் பாதகமான முடிவுகள் எடுக்கப்படுவது தாமதப்படுவதும், தமிழ் தேசத்தின் இறையாண்மை தொடர்பில் தீர்க்கமான உரையாடகள் தொடங்கியிருப்பதும் ‘எழுக தமிழ்!’ மக்கள் பேரணி ஏற்படுத்திய சாதக விளைவுகளே ஆகும்.

எனவே – இலங்கை நாட்டிற்கான புதிய அரசமைப்பு சட்டம் எழுதப்படுகின்ற இந்த வேளையில் – தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யாத தீர்வு ஒன்றை அந்த அரசமைப்புச் சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் சம்மதத்துடனேயே அவர்கள் மீது திணித்துவிடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்ற வேளையில் – பிரிக்கப்படாத தமிழ் தேசத்திற்கான அங்கீகாரத்தை வலியுறுத்தி – ஒரே குரலில் – ஜனநாயக முறையில் – மீண்டும் மீண்டும் தாயகமெங்கும் மக்கள் திரள வேண்டிய தேவை இப்போது அவசியமாக ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே – ‘எழுக தமிழ்’ மக்கள் எழுச்சியின் அடுத்த அணிதிரள்வு எதிர்வரும் ஜனவரி 21, {2017} அன்று கிழக்கு மாகாணத்தில் நிகழ்வதற்கான தயார்ப்படுத்தல்கள் நடந்தேறிவருகின்றன.

பிரிக்கப்படாத தமிழ் தேசத்திற்கான அங்கீகாரத்தை வலியுறுத்தி தாயகத் தமிழர்கள் திரளவிருக்கும் இந்த ‘எழுக தமிழ்!’ பேரணியின் ஏற்பாடுகளைச் செய்துமுடிப்பதற்கு – உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரிடமிருந்தும் நாம் நிதி உதவியினை வேண்டி நிற்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை ஏற்று, உலகத் தமிழினம் எமக்கு காலம் தாழ்த்தாது கைகொடுக்கும் என்று தமிழ் மக்கள் பேரவை நம்புகின்றது.

அதிகாரபூர்வத் தொடர்புகளுக்கு: tpcofficialmail@gmail.com

வங்கிக் கணக்கு விபரம் :-
Bank & Branch:- Hatton National Bank – Metro Branch, Jaffna.
Account Name: V. P. Sivanathan
Account Number:- 016020760055
Bank Code:- 7083
SWIFT Code:- HBLILKLX

த. வசந்தராஜா
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை.
பணிப்பாளர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மட்டக்களப்பு மாவட்டம்.

பேராசிரியர் .வி. பி சிவநாதன்
நிதிக்குழு, தமிழ் மக்கள் பேரவை.
பேராசிரியர், பொருளியற் துறை, யாழ் பல்கலைக்கழகம்.

Related Posts