Ad Widget

கிழக்கில் ஹர்த்தால் – 3 அசம்பாவிதங்கள் பதிவு!

கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலின்போது 3 அசம்பாவிதங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அங்கொடையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து சர்தாபுர எனும் பகுதியிலும் மூதூர் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஆண்டான் குளம் பகுதியிலும் இனந்தெரியாத நபர்களது கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.

மேலும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இனந்தெரியாத நபர்களால் டயர்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக நகர் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சேவைகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனியார் பேருந்து நிலையமானது வெறிச்சோடிக் காட்சியளிப்பதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலக்கி மக்களை நேசிக்கும் ஆளுனர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தால் காரணமாக திருகோணமலை நகரானது முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் நேற்று ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்த துண்டுப்பிரசுரங்கள் கிழக்கின் பல பகுதிகளில் விநியோகிக்கப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாணத்திற்கு மக்களை நேசிக்கும் ஒரு ஆளுநரை நியமிக்குமாறு கோரியே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இதற்கமைவாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் அனைத்து கடமைகள், வியாபார மற்றும் தொழில் நடவடிக்கைகளை நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

எனினும் அனாமதேய துண்டுபிரசுரத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையினால், ஒரு சில பகுதிகளிலேயே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts