Ad Widget

கிளிநொச்சி நீதிமன்றில் களவாடிய கஞ்சாவுடன் கைதானோரை விசாரிக்க சி.ஐ.டிக்கு அனுமதி!

கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி நீதிமன்றில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கடந்த சனிக்கிழமை இரவு திருட்டுப் போயிருந்தது.

இந்நிலையில் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கை ஒன்றின்போது 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் திங்கட்கிழமை வவுனியாவில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கிளிநொச்சி நீதிமன்றில் திருடப்பட்டிருந்த கேரளா கஞ்சாவே அவை எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மூவரையும் புதன்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை மேலும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மாவட்ட நீதிமன்றம் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் வவுனியாவையும் ஒருவர் கிளிநொச்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts