Ad Widget

கிளிநொச்சியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 25 பேர் கட்டுப்பாடுகளை மீறல் – அனைவரையும் மாங்குளம் வைத்தியசாலைக்கு மாற்றியது சுகாதாரத் துறை

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நவம்பர் 23ஆம் திகதி பிசிஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

குடிதண்ணீர் போத்தல்களை மேல் மாகாணத்திலிருந்து எடுத்து வந்து கிளிநொச்சியில் விநியோகிக்கும் நிறுவனம் வயோதிபரின் கடைக்கு அருகில் இயங்கியது.

அவர்கள் முதியவரின் கடைக்கு வந்து செல்வதால் அவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் சாரதி உள்ளிட்ட மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்தக் கடைகளுக்கு அருகாமையில் இயங்கிய அந்தியகால சேவை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றிய 20 வயதுடைய இளைஞன் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து இளைஞனுடன் தொடர்புடைய 25 பேர், பாரதிபுரத்தில் உள்ள அவர்களுடைய வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் நடமாடுவது பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டு சுகாதாரத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனால் அவர்கள் 25 பேரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மாற்றுவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அதுதொடர்பில் அனுமதி கிடைக்கத் தாமதமாவதால், மாங்குளம் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை விடுதிக்கு அவர்கள் 25 பேரும் நேற்றையதினம் மாலை தொடக்கம் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் அடுத்த வாரம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts