Ad Widget

கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், திருவையாறு, தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் கொழும்பிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஆனால், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர் வெளித் தொடர்பு இல்லாதவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு, நேற்று முன்தினம் முதலாவது பி.சி.ஆர். பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது ‘கண்டறிய முடியவில்லை’ என (Inconclusive) முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், மீளவும் நேற்று பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், தொற்று அபாயமுள்ள வெளியிடங்களுக்கு எங்கும் சென்றுவராத நிலையில், இவருக்கான தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்படி நபர் சிகிச்சை பெறச் சென்ற பொதும், வைத்தியசாலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த நபர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச்சென்றது முதல் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உரிய பாதுகாப்புடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுவரை நோயாளியை உரியவாறு கையாண்டமையால் வைத்தியசாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாது பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக வைத்தியசாலை ஊழியர்களோ, நோயாளர்களோ, பயனாளிகளோ பதற்றமடையத் தேவையில்லை எனவும் அனைத்து நோயாளர் நலன் சேவைகளும் இடையூறின்றி வழமைபோல் நடைபெறுமெனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்று உறுதியானவரின் பாரதிபுரத்தத்தில் உள்ள வீடு மற்றும் அவர் பணிபுரிந்த தொண்டமான் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகத் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என சுகாதாரத் தரப்பு எச்சரித்துள்ளது.

Related Posts