Ad Widget

கிளிநொச்சியில் கவனிப்பாரற்றுத் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 47ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

“சுதந்திரபுரத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எனது மகன் இன்னும் வீடு வந்து சேரவில்லை. அவரைப்பற்றிய தகவல்கள் இதுவரை எதுவுமே எமக்கு கிடைக்கவில்லை” என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவர் கண்ணீருடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விசாரணை முடிந்தவுடன் அனுப்பி வைத்துவிடுவோம் என உறுதியளித்து அழைத்துச் சென்ற மகனின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என குறித்த தந்தை கண்ணீருடன் தெரிவித்தார்.

காயமடைந்திருந்த எமது மகன், வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டபோது எமது உறவினர்கள் அவரைக் கண்டதாகவும், அதற்குப்பின்னர் எனது மகனைப்பற்றிய தகவல்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து நான் வவுனியா யோசப் முகாம், செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இடங்களில் முறைப்பாடு செய்திருக்கின்றேன். ஆனால் இதுவரை எனக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை.

“நானும் எனது மனைவியும் மட்டுமே எஞ்சியிருக்கின்றோம். விரைவில் எமது மகன் வருவார் என நம்பிக் காத்திருக்கின்றோம்” என்றார்.

Related Posts