Ad Widget

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம்!

கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பூநகரி, பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி இலவன்குளம் பகுதியில் நேற்று முதல் இக்குடும்பத்தினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தமது தொழிலில் ஈடுபடும் பகுதியில் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பண்ணையை அகற்றி தமது தொழிலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இவர்கள் உண்ணாவிரதமிருக்கின்றனர்.

பாடசாலைக்கு செல்லும் சிறார்கள் நால்வருடன் தமக்கு நீதி கிடைக்கும் வரை தாய், தந்தை ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடரவுள்ளனர்.

இப்பகுதியில் கடல் அட்டை வளர்ப்பிற்கு தொழில் புரியும் கடல் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு நீரியல் வள திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கடல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இப் பகுதியில் இயற்கையாக கடலட்டை வளர்ந்து வருவதாகவும், அப்பகுதியில் பெண்கள் பகுதி நேரமாக கடலட்டை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தமது தொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தொடர்பில் மேலதிகாரிகளிற்கு எடுத்து கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சரியான தொழில் இன்மையால் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று வந்த நான், போதிய வருமானம் இன்மையால் கல்வியை தொடர முடியாது மீண்டும் இப்பகுதிக்கு வந்து கல்வி கற்று வருவதாக தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி, தமது குடும்பம் பாரிய பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

Related Posts