இராணுவ கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
கிளிநொச்சியிலிருந்து இரணமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரை அதே திசையில் பயணித்த இராணுவ வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான க.குகனேஸ்வரன் (வயது -51) என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரும் சென்று விசாரணைகளை மேற்பார்வை செய்தார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.