Ad Widget

கிளிநொச்சியில் இன்று சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை முதலமைச்சர், வடக்கு, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடல் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்குமான கூட்டத்தைக் கூட்டுமாறு பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வடக்கு மாகாணசபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தும் இருந்தனர். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இந்தக் கூட்டம் இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்பட நிகழ்கால விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts