Ad Widget

கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும் : முதல்வருக்கு சிறிதரன் கடிதம்!

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

அக்கடிதத்தில் மேலும்,

‘வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன். அது தங்களுக்கும் தெரியும். தொடர்ந்து வடமாகாண சபை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினைத்திறனுடன் சேவையாற்ற வேண்டும். அதற்கு தாங்கள் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவி வகிப்பது பொருத்தமானது. நான் தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றமையால் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். காரணம், கட்சி தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். ஆதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் உங்களின் தொடர் மக்கள் நலன்சார் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதவாக இருப்பேன்.

மேலும், வடக்கில் ஊழலுக்கு எதிரான தங்களின் நடவடிக்கையை நான் வரவேற்கின்றேன். இருப்பினும் விசாரணை பொறிமுறையில் காணப்படட குறைபாடுகளை நீங்கள் நீக்கியிருந்தால் நிலமை இந்தளவு சிக்கலுக்குள் சென்றிருக்காது என்பது எனது கருத்து.

அத்தோடு, குற்றம் சாட்டப்பட்டு தங்களின் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன்.

அவ்வாறே கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால் அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதோடு, இனிவரும் குறுகிய காலத்துக்குள் தங்களுக்கு பொருத்தமான அமைச்சர்களை நியமித்து சிறிப்பாக செயற்பட எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Posts