Ad Widget

கிராமியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு காத்திரமானது – டக்ளஸ்

கிராமியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்து பலப்படுத்துவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மாதர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சமூகத்தில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் பெண்கள் தாம் சார்ந்து வாழும் பகுதிகளில் கிடைக்கப்பெறக் கூடிய வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி சுயதொழில்துறைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக பனை, தென்னை என்பவற்றிலிருந்து கிடைக்கப்பெறக்கூடியதான மூலப்பொருட்களைக் கொண்டு சுயதொழில்துறைகளை முன்னெடுக்கும்போது அதனூடாக வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும்.

அதுமட்டுமன்றி இவ்வாறான தொழில்துறைகளைக் கூட்டாக முன்னெடுக்கும்போது வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அதுமட்டுமன்றி தாம் சார்ந்து வாழும் சமூகத்தை ஒரு ஒழுங்குமுறைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதுடன் பெண்களுக்கான தலைமைத்துவத்தையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் அதேவேளை பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே தாம் வாழும் சமூகத்தின் நலன்சார்ந்த கிடைக்கப்பெறக்கூடிய உள்ளூர் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தும் பொருட்டு அதற்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி அதிக நன்மைகளையும் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி தாம் வாழும் பகுதிகளில் சிறிய வீட்டுத் தோட்டங்களை அமைப்பது, கால்நடைகளை வளர்ப்பது மற்றும் பெண்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்ட தொழிற்றுறை சார்ந்த பயிற்சிநெறிகளினூடாகவும், செயற்திட்டங்கள் ஊடாகவும் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் தென்பகுதியிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற மூலப்பொருட்களைக் கொண்டு காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன வடிவமைப்புக்களைக் கொண்ட உற்பத்திகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இவ்வாறு கிராமியப் பொருளாதாரத்தின் மேம்பாட்டிற்கும் உயர்விற்கும் பெண்களின் பங்கு காத்திரமானது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக தாம் சார்ந்து வாழும் சமூகத்தை மேலும் முன்னேற்றம் காணச் செய்வதற்கு பெண்கள் சமூக அக்கறையுடன் உழைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related Posts