Ad Widget

கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது: மு.சந்திரகுமார்

chandrakumar_epdpயாழ். மாவட்டத்தில் நகர்புறக் கல்வி நிலைமையோடு ஒப்பிடுகையில் கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார்.

சுமார் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்/அராலி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டத் தொகுதியினைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ‘மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தம் வலியுறுத்தி வருகின்றோம்’ என்று குறிப்பிட்டார்.

‘இன்று யாழ். மாவட்டம் பாரிய யுத்தத் தாக்கத்திலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே விடுபட்டிருந்தபோதும் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. அதிலும் யாழ். மாவட்டத்தின் நகர்புறக் கல்வி நிலைமையோடு ஒப்பிடுகையில் கிராமப்புறங்களின் கல்வித்தரம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலைக்கே சென்றுகொண்டிருக்கின்றது. இது கல்வியியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே மாவட்டத்தின் எல்லாப்பகுதிகளிலும் கல்வியில் சமவிகிதமான வளர்ச்சிப்போக்கு இருக்க வேண்டும்’ என அவர் வலியுறுத்தினார்.

‘வன்னிப் பிரதேசங்களில் இயங்கும் பாடசாலைகளில் மிக அதிகளவான பௌதீக வளப்பற்றாக்குறைகள் மற்றும் ஆசிரியர் வளப்பற்றாக்குறைகளும் நிலவுகின்ற நிலையில்தான் அங்குகுள்ள பாடசாலைகள் கல்வியில் சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் யாழ். மாவட்டத்தில் இவ்விரு வளங்களும் ஓரளவு நிறைவாகக் கிடைக்கின்றன. ஆசிரியர் வளத்தினை பொறுத்தவரை இங்குள்ள கிராமப்புற பாடசாலைகளிலேயே குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இருப்பினும் அது மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பற்றாக்குறைகளென கூறிவிட முடியாது’ என்றார்.

‘இருப்பினும் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான இம்மூன்று வருடத்திற்குள் வன்னிப் பிரதேசங்களில் கல்வித்தரம் படிப்படியான முன்னேற்றங்களை எட்டிவருகின்றன. இன்று நிம்மதியாக கல்விகற்கக்கூடிய நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சூழலை பயன்படுத்தி அவர்கள் முன்னேறத் துடித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதேவேகம் யாழ். மாவட்டத்தில் இயங்கும் கிராமப்புற பாடசாலைகளிலும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்’ எனவும் அவர் கூறினார்

Related Posts