Ad Widget

கிணற்று நீரை பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு கோரிக்கை

யாழ். சுன்னாகம் பிரதேச கிணறுகளின் நீரை பாவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பகிரங்கமாக உரிய அரச அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்று சுன்னாகம் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், வெள்ளிக்கிழமை (22) கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுன்னாகம் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(21) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணை கலந்துள்ள விடயம் அனைவரும் அறிந்துள்ள விடயம். தற்போது அயல் பிரதேசங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சுன்னாகத்தில் நொர்தேன் பவர் மின் பிறப்பாக்கி அமைந்ததில் இருந்து நீர், வளி, நிலம் போன்றவற்றில் பாதிப்புக்களை நாம் நன்கு உணர்ந்திருந்தோம்.

அது தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அதிகாரிகளிடத்தில் முறையிட்டிருந்தோம்.

இந்த பிரச்சனை தொடர்பாக ஆராய்வதற்கு 8 அரச அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாக பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று பொது மக்களுக்கு தெரியாது.

ஆனால் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையால் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று வரை எமது பிரதேசத்திலுள்ள பல மக்களுக்கு இந்த விடயம் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

மக்களை உரிய முறையில் வழிநடத்தவில்லை. இது தொடர்பான முழுமையான நடவடிக்கைகளை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்தியதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

இந்த நீரை பருகுவதால் பல பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூடுதலாக சிறு பிள்ளைகளை பாரிய நோய்கள் பாதிப்பதற்கு கூடிய சாத்தியம் உள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஏன் எமது பிரச்சனையில் பாராமுகமாக இருக்கின்றார்கள். மனித நேயம் பற்றிய சிந்தனை இல்லாத செயற்பாடுகளை ஏன் தடை செய்யாமல் அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள்.

பாரதூரமான விளைவை அலட்சியம் செய்துகொண்டு இருப்பது வேதனைக்குரிய விடயம் ஆகும். நாம் தற்போது கடவுளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று குடிநீர் திட்டத்தை பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். மேலும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

இல்லாதுவிடின் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக அவர்கள் மேலும் கூறினார்.

Related Posts