Ad Widget

கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைக்க இடமளிக்கமாட்டோம்: கஜதீபன்

யாழ். நல்லூரில் உள்ள கிட்டுப்பூங்காவில் (சங்கிலியன் சிலைப்பகுதி) இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

Kajatheepan-tna

கிட்டு பூங்காவை இராணுவம் கையகப்படுத்த எண்ணியுள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர்களின் பாரம்பரிய நினைவிடங்களை அழிக்க நினைப்பதையும் நிலத்தை அபகரிக்க நினைப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கிட்டுப்பூங்கா ஒரு முக்கிய சுற்றுலா மையமாகையால், அதில் இராணுவ முகாம் அமைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.

கிட்டு பூங்காவைப் புனரமைத்து சிறுவர்களுக்கான ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையமாக உருவாக்க எண்ணியுள்ளோம். ஒரு ஜனநாயக நாட்டில் மரணித்த வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் அவர்களுக்கு நினைவாலயம் அமைப்பதும் ஜனநாயக உரிமை.

மண்ணுக்காய் மரணித்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் புனிதர்கள். அதைத் தடுக்கின்ற அதிகாரம் எவருக்கும் கிடையாது. ஆனால், எமது நாட்டில் ஜனநாயகம் புரையோடிப் போயுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை இராணுவம் அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்த முயல்வதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

எமது வளங்கள் பாதுகாக்கப்பட்டு வரலாறுகள் ஆண்டாண்டு காலத்துக்கும் பேணப்பட வேண்டும். இராணுவம் இன அழிப்பை மேற்கொள்வதுடன் எமது இனத்தின் இருப்பையும் வரலாற்றையும் இல்லாதொழிக்கின்ற நடவடிக்கையினையும் மேற்கொள்கின்றது.

இவ்வாறான இராணுவத் தலையீடுகளும் நில அபகரிப்புகளும் எமது நல்லெண்ண விடயங்களைப் பாதிக்கின்றதுடன் இந்தச் செயற்பாடுகள் இடம்பெற நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி

நல்லூர் கிட்டு பூங்காவை அபகரிக்க இராணுவம் முயற்சி?

Related Posts