Ad Widget

காவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது அவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் என்று கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

‘கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று கொடிகாமம் காவல்துறையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோத மணல் ஏற்றப்பட்ட உழவியந்திரம் பயணித்தது.

அதனைக் காவல்துறையினர் வழிமறித்த போதும் கடத்தல்காரர்கள் உழவியந்திரத்தால் காவல்துறையினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து உழவியந்திரத்தில் வந்த மணல் கடத்தல்காரர்கள் இருவரும் உழவியந்திரத்தை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து மணலோடு உழவியந்திரம் காவல்நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. தப்பிச்சென்ற கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் நான்கு தடவைகள் கொடிகாமம் காவல்துறையினர் மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts