Ad Widget

கால்நடை தீவனத்தின் நிறையில் மோசடி!! பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்எச்சரிக்கை!!

கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப் பொதிகளில் குறிப்பிட்ட நிகர எடைக்கு குறைவான நிலையில் பொதி செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறிப்பாக அரிசி, தவிடு, புண்ணாக்கு என்பன பொதி செய்யப்படும் போது பொறிக்கப்படும் நிறையை விட 2 கிலோகிராம் குறைவாக பொதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் தீவனப்பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், நிறையினை சரி பார்த்து வாங்க வேண்டும். நிறை குறைவான பொதிகள் காணப்படுமிடத்து அது தொடர்பில் கம்பனிக்கு தெரியப்படுத்தி, அதனை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும்.

இவ்விடயம் தொடர்பில் அந்தக் கம்பனியின் யாழ். மாவட்ட ஏக விநியோகஸ்தருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். மேற்படி கம்பனியின் பொதிகளில் நிறை குறைவாக உள்ளமையை ஏக விநியோகஸ்தரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அவற்றை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Posts