மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்) தேசியமயப்படுத்துமாறு கோரி, காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் உப செயலாளர் நளிந்த ஹேரத், காலவரையற்ற இந்த வேலைநிறுத்தம், அனேகமாக இம்மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பான இறுதி முடிவு, கொழும்பில் நாளை (9) கூடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் மூலமாக, காலவரையறையற்ற போராட்டத்துக்கான எச்சரிக்கையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தொழிற்சங்கத்தின் சமிபகால நடவடிக்கைகளுக்கு, அரசாங்கம், பொருத்தமான பதிலை வழங்காத நிலையில், காலவரையறையற்ற போராட்டத்துக்கான திகதியை, நிறைவேற்றுக் குழு முடிவு செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.
தங்களது போராட்டத்துக்கு, ஏராளமான தொழிற்சங்கங்கள், தங்களது ஆதரவை வழங்குமென எதிர்பார்ப்பததாக, அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.